தென் மாவட்டங்களில் மிகவும் முக்கியமான மருத்துவமனையாக திகழ்ந்துவரும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கர்ப்பிணிகள்-குழந்தைகள் அவசர சிகிச்சை சிறப்புப் பிரிவு செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில்...
- எத்தனை கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்?
- இதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?
- பிறந்து 28 நாள்களுக்குள் இறந்த குழந்தைகள் எத்தனை?
எனப் பல கேள்விகளை முன்வைத்து சமூக செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையிடம் கேட்டிருந்தார்.
அதற்கு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- 2017ஆம் ஆண்டு 463 குழந்தைகள்,
- 2018ஆம் ஆண்டு 409 குழந்தைகள்
என மொத்தம் 872 குழந்தைகள் இறந்துள்ளனர். அதேபோல்,
2017ஆம் ஆண்டு சுமார் 24 ஆயிரத்து 78 கர்ப்பிணிகளும் 2018ஆம் ஆண்டு 22 ஆயிரத்து 375 கர்ப்பிணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில்,
- 2017ஆம் ஆண்டு 81 கர்ப்பிணிகளும்,
- 2018ஆம் ஆண்டு 55 கர்ப்பிணிகளும்
சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய வெரோனிக்கா மேரி, "கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து கடைசி நேரத்தில் மேல் சிகிச்சைக்காக இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதால்தான் இதுபோன்ற இறப்புகள் அதிகம் நடக்கின்றன என்று கூறப்படுகிறது.
எனவே இராசாசி மருத்துவமனையில் இருக்கிற அதிநவீன வசதிகள் போன்று கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படுத்திக்கொடுத்தால் இம்மாதிரியான இறப்புகளைக் குறைக்கலாம்" என்றார்.
இதையும் படிங்க: 'யாராக இருந்தாலும், வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது' - அமைச்சர் ஜெயக்குமார்