மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்கலம் எழும்பூர் பகுதியில் வசித்து வருபவர் கட்டடத் தொழிலாளி முத்தமிழ்ச்செல்வன் (51). இவர் கட்டட வேலை செய்து வந்தார். மேலும் எழும்பூர் கண்மாயில் மீன்பிடிப்பதற்கு குத்தகை எடுத்து, அதில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார்.
இதனால் கண்மாய் ஏலம் எடுப்பதில், இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை கண்மாய் அருகே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த முத்தமிழ்ச்செல்வன் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து அலங்காநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முத்தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன் பகை காரணமாக, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்தனர். பின்னர், சந்தேகத்திற்கு இடமாக சிலரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு: ரவுடி வெட்டிக்கொலை