பிரதமர் வேளாண்மை உதவித் தொகை திட்டமான கிசான் திட்டத்தில் கரோனா சிறப்பு நிதி எனக் கூறி 13 ஆயிரத்து 77 தகுதியற்ற நபர்கள் பணம் பெற்றது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சிபிசிஐடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இம்முறைகேடு காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி மேலாளர், வட்டார தொழில்நுட்ப அலுவலர்கள், கணினி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 62 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மோசடி தொடர்பாக ஆறு பிரிவுகளின்கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 800 பேருக்கு கிசான் உதவித்தொகை வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் திருமங்கலம், சேடப்பட்டி, உசிலம்பட்டி, கள்ளிக்குடி ஆகிய பகுதிகளில் 100 நாள் வேலை பணியாளர்கள் பெயரில் மோசடியாக உதவித்தொகை பெறப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை மதுரை மாவட்டத்தில் நான்காயிரத்து 232 வங்கிக் கணக்குகளிலிருந்து 1.6 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திரும்பப் பெறப்பட்டால் நடவடிக்கை பாயாது, உதவிய அலுவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர் நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள 420 ஊராட்சிகளிலும் சிறப்பு விசாரணை குழுவினர் கிராமம் வாரியாகச் சென்று மோசடி குறித்து விசாரணை நடத்தி பணத்தை மீட்டுவருகின்றனர்.