சிவங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 5ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டுவருகிறது. கடந்த ஜூன் 13ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனால் இந்த அகழாய்வுப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை காப்பாட்சியர் பிரபாகரன் தலைமையில் தொல்லியல் கண்காணிப்பாளர் சிவானந்தம் ஒருங்கிணைப்பில் இந்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. அகழாய்வுப் பணிகள் தொடங்கியதிலிருந்து பானையோடுகள், மட்பாண்டங்கள், கலயங்கள், கல்லாலான ஆயுதங்கள், அழகு பொருட்கள் ஆகியவை கிடைத்துவந்த நிலையில், சங்க காலத்தைச் சேர்ந்த இரட்டைச் சுவர் போன்ற அமைப்பு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்ற இன்றைய அகழாய்வுப் பணியின்போது இரட்டை சுவர் கண்டறியப்பட்ட இடத்திற்கு அருகிலேயே வடகிழக்காகவும், தென்மேற்காகவும் அமைந்த ஒரு செங்கற் சுவர் தெரிந்தது.
இதன் கட்டமைப்பு முழுமையான அகழாய்வுக்குப் பிறகே தெரியவரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் 4 அடி உயரமுள்ள உறைகிணறு ஒன்றும் வெளியே தெரிந்தது. நான்கு அடுக்குகள் கொண்டதாக இந்த உறைகிணறு அமைந்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் அகழாய்வில் ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.