மதுரையில் கீழடி அகழாய்வு தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர் கே பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “கீழடி தொல்பொருட்களை மூன்று அறைகளில் கண்காட்சியாக வைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்த்துச் செல்கின்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கொந்தகை என்ற இடத்தில் இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அடுக்குகள் கொண்ட புதிய அருங்காட்சியகத்தை உலகத்தரத்தில் அமைக்கவுள்ளோம். அதில், மெய்நிகர்(Virtual Reality) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழடியில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்தவுள்ளோம்.
ஜனவரி 15ஆம் தேதி முதல் கீழடியை ஒட்டியுள்ள நான்கு கிராமங்களில் அகழாய்வு நடத்தவுள்ளோம். முதல் இரண்டு கட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்து மத்திய அரசு தகவலளித்துள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு குறித்து இரண்டு வாரங்களில் அவர்கள் ஆய்வுகளைத் தரவிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு சதி செய்யவில்லை. கீழடியில் கிடைத்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை மத்திய அரசு கொடுக்கவுள்ளது. அதையும் சேர்த்து கொந்தகையில் இடம்பெறச் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். பாடப்புத்தகத்தில் விரைவில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் போன்று வைகை நதி நாகரிகமும் இடம்பெறும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை - தமிழ்நாடு தொல்லியல் துறை