மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, இதனை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்தத் திட்டம் இந்தியாவினுடைய பன்முகத் தன்மைக்கு எதிரான திட்டம். அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக திட்டம் இது கிடையாது. இது அனைவரையும் இந்தி, இந்துத்துவா அடையாளத்தினுள் கொண்டு வரவேண்டும் என்ற முயற்சிதான். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
பெரியார் குறித்து உண்மையைத்தான் கூறியுள்ளேன் அதற்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று ரஜினி கூறியது குறித்த கேள்விக்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவர் வரவேற்கிறாரா? எதிர்க்கிறாரா? ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டிக்கிறாரா? பணமதிப்பு நீக்கத்தை வரவேற்கிறாரா? எதிர்க்கிறாரா? ஜிஎஸ்டியை வரவேற்கிறார்? எதிர்க்கிறாரா?
இத்தகைய நடைமுறை விஷயங்களில் கருத்து கூறாமல், பெரியாரை பற்றி ஏன் பேசவேண்டும். நடைமுறையில் இன்று நடைபெறுகின்ற அரசியல் நிகழ்வுகளுக்கு அவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்.