மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணி ராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார். அதில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை இருந்த காலகட்டத்தில் இணை பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது, இதில் தகுதியற்ற பலருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உயர்மட்ட குழு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்ட குழு, முறைகேடு நடந்திருப்பதை உறுதிசெய்து அறிக்கையளித்தது. மேலும் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்விற்குத் தடைவிதித்து, உயர்மட்டக் குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் உயர்மட்ட குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவர்களுக்கு எந்தவித பதவி உயர்வும் வழங்கக்கூடாது எனவும், மனுவிற்குப் பல்கலைக்கழகம் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க...முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனு - மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!