மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. கோட்டையில் உட்கார்ந்து கொண்டு அதைச் செய்ய முடியாது. மக்களோடு பணி செய்து அதனைச் சரி செய்ய வேண்டும். அதனை மக்கள் நீதி மய்யம் செய்யும் என நம்புகிறது.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குவது என்பது எங்களின் உறுதிமொழிகளில் ஒன்றாகும். அனைவருக்கும் தண்ணீர் தருவது என்பது இயலாத காரியம் அல்ல. பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்புத் தந்து குடிமராமத்துப் பணிகளில் ஈடுபட்டால், நாங்களும் உங்களோடு கைகோர்த்து அதனைச் செவ்வனே செய்து தருவோம். ஆனால் ஆட்சியாளர்கள் கஜானாவுக்குள்ளிருந்து தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குடிமராமத்துக்கென்று எவ்வளவு பணம் ஒதுக்கினார்கள் என்பதை சொல்வார்கள். அதிலிருந்து தங்களுக்கு எவ்வளவு ஒதுக்கினார்கள் என்பதை சொல்ல மாட்டார்கள். தமிழ்நாட்டின் அரசு பரிபாலனம் பல ஆண்டுகளாக மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அலுவலர்களுக்கும் இது தெரியும். ஆனால் அவர்களுக்குச் செயல்பட ஆணை பிறப்பிப்பவர்கள் நல்லவர்களாக இல்லை என்பதுதான் உண்மை" என்றார்.