திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் தேர்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், "சமுதாயம் மீது எனக்கு நிறைய கோபம் உள்ளது. என்னை பார்த்து இந்து விரோதி என விளையாட்டு காட்டதீர்கள். தமிழ்நாட்டில் காந்தி, போஸ் என்று பலரும் பெயர் வைத்துள்ளனர். வடநாட்டில் யாருக்காவது காமராஜர் எனப் பெயர் உள்ளதா? கொள்ளையடித்த சம்பாதித்த பணத்தில் சிறிதளவு உங்களிடம் கொடுக்கப்படுகிறது. ஒரு பக்கம் தாலிக்கு தங்கம் கொடுக்கப்படுகிறது. மறுபுறம் டாஸ்மாக் திறந்து வைக்கப்படுகிறது. என் வாழ்வின் எஞ்சிய உழைப்பு உங்களுக்காக மட்டுமே. நம்மை நாமே கவனித்து கொண்டால் நாளை நமதே" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அனுமன் சேனா அமைப்பினர், கூட்டம் நடக்கும் இடத்தில் வந்து கமலுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் சிறியதாக சலசலப்பு ஏற்பட்டது. இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.