மதுரை: மின் கட்டணம், சொத்து வரி உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அனைத்து பொருள்களின் விலைவாசி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மின் கட்டணம், சொத்து வரி, பெட்ரோல், டீசல் என எல்லாமே விலை உயர்ந்துள்ளது. இது தவிர ஜிஎஸ்டி எனக் கூறி ஏற்கனவே நிறைய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது., வருமானத்திற்கு என்ன வழி இருக்கிறது? என்பதை அரசாங்கம் யோசிக்க வேண்டும்” என கூறினார்.
மேலும் அரசாங்கம் என்பது மக்களுக்காகத் தான். கரோனாவில் இருந்து இன்னும் மக்கள் மீளாத சூழ்நிலையில் வருமானம் இன்றி மக்கள் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கும் போது அரசுக்கு மட்டும் வருமானம் வரவேண்டும் என்று குறிக்கோளாக இருப்பது தவறான விஷயம். தற்போது பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுகளுக்கும் ஜிஎஸ்டி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்காகத்தான் தேமுதிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
மதுரை வந்த நோக்கமும் அது தான் எனவும் மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கான அரசாங்கமாக இருந்தால் தான் வரவேற்கக் கூடியதாக இருக்கும். எனவே தான் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.
கொலையா...தற்கொலையா? தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாணவி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஈரம் கூட காயாத சூழ்நிலையில் தினந்தோறும் மாணவிகள் தற்கொலை சம்பவம் நடைபெறுகின்றன. இந்த வழக்கைப் பொறுத்தவரை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் போதாது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உண்மையில் அந்த மாணவி கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை முதலில் தெரியப்படுத்த வேண்டும்.
தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடாமல் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால் அதற்கான அழுத்தம் வர யார் காரணம் என்பதை கண்டறிய வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி மாணவிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
’உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்’ நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மீது நடத்தப்படும் விசாரணை குறித்த செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த பிரேமலதா, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஊழல் வழக்குகளைச் சுமத்தினார்கள். இன்று காங்கிரஸ் ஆட்சியில் இல்லை பாஜக ஆட்சியில் இருப்பதால் காங்கிரஸ் மீது என்றோ போடப்பட்ட அந்த ஊழலைக் கொண்டு வருகிறார்கள்.
யார் ஆளுங்கட்சியாக இருக்கிறார்களோ ஏற்கனவே ஆண்ட கட்சி மீது ஊழல் வழக்கு கொண்டு வருவது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருந்து வரும் ஒரு விஷயம். யாராக இருந்தாலும் தப்பு செய்திருந்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும். உண்மையிலேயே தவறு செய்திருந்தால் காங்கிரஸ் கட்சி தண்டிக்கப்பட வேண்டும்.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும். தவறு செய்தால் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம் தான். உண்மையில் தப்பு செய்திருந்தால் தண்டனை கிடைக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் காமராஜரின் தேசிய ஆட்சியை பாஜக விரைவில் அமைக்கும்' - அர்ஜூன் சம்பத்