மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 13,14,15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான கால்கோல் விழா தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை ஆட்சியர் வினய், மதுரை மாநகர ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகின்றன. கபடி விளையாட்டின் தலைமையிடமாக விளங்கும் மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நடைபெறுவது பெருமை அளிக்கிறது.
இந்த போட்டியை நடத்த வாய்ப்பளித்த முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கபடி திருவிழாவில் வெற்றிபெறும் அணியின் வீரர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து முதலமைச்சரின் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் முறையான அழைப்பு வரும் என்றார்.
இதையும் படிங்க: சிவகாசியில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!