பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜனவரி 14, பாலமேட்டில் ஜன 15, அலங்காநல்லூரில் ஜன 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் போட்டிகளில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்கள், காளைகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி அவனியாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாலமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகளில் நாளை (ஜன. 8) மாடுபிடி வீரர்களின் பெயரையும், ஜன 11 ஆம் தேதி ஜல்லிக்கட்டு காளைகளின் தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன்படி அவனியாபுரத்தில் பங்கேற்கும் வீரர்கள் ஜனவரி 10, 11ஆம் தேதிகளிலும், பாலமேட்டில் பங்கேற்போர் ஜனவரி 11, 12ஆம் தேதிகளிலும், அலங்காநல்லூரில் பங்கேற்போர் ஜனவரி 12, 13-ஆம் தேதிகளிலும் கரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.
மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்கள் பதிவின்போது ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
மேற்கண்ட இடங்கள் தவிர அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்து தகுதிச்சான்று வழங்கும் மாடு பிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
பார்வையாளர்கள், விழா அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைவரும் கட்டாய முகக்கவசம் அணிவதுடன் தகுந்த இடைவெளி, அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சொர்க்க வாசல் திறப்பு விழா குறித்த புகைப்படத் தொகுப்பு