மதுரையைச் சேர்ந்த காளவாசல் சிலம்பரசன், விளாங்குடி சுபாஷ் சந்திரபோஸ், முடக்கத்தான் மணிரத்தினம் ஆகிய மூவரும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றவர்கள். இந்நிலையில் மாடு முட்டி கண்கள் காயப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கண் மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கே பயிற்சி மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் காரணமாக தங்களது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்தனர்
இதுகுறித்து சிலம்பரசன் கூறுகையில் ”நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பவர்கள். அதில் தற்போது நடந்த போட்டிகளில் காளைகள் எங்களது கண்ணில் குத்தியதால் காயம் ஏற்பட்டது. இதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம். அங்கு எங்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் மூலம் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையால் கண் பார்வை முழுவதுமாக பறிபோனது. இதனால் அந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் எங்களுக்கு உரிய மறுவாழ்வு அளிக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என்றார்.
இது குறித்து பேசிய ஜல்லிக்கட்டு பயிற்சி மைய நிறுவனர் மணிகண்ட பிரபு ”இந்த இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு மட்டுமே பெரும் தொழிலாக இருந்த நிலையில் தற்போது கண்பார்வை இழந்துவிட்டார்கள். ஆகையால் தமிழ்நாடு அரசு இவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும்” என்றார்.
.