மதுரை மாவட்டம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வலையங்குளத்திற்கு அருகே உள்ளது சோளங்குருணி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரபல மாடுபிடி வீரர் தீபக் வளர்த்துவந்த 'அப்பா' என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு காளை நேற்று மாலை 6 மணியளவில் உடல்நலம் குன்றி இறந்துபோனது.
இறந்துபோன மனிதர்களுக்கு இறுதிக் காரியம் செய்வதைப் போல, உடல் நலம் குன்றி இறந்துபோன ஜல்லிக்கட்டுக் காளைக்கு ஊரே கூடி இறுதிச் சடங்கு செய்தது.
இது குறித்து அப்பா காளையின் உரிமையாளர் தீபக் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வீரர்களை திணறச் செய்த காளை இது. மறைந்த எனது தந்தையாரின் நினைவாக 'அப்பா' என்று பெயர் வைத்து வளர்த்துவந்தேன்.
ஏறக்குறைய 1000-க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் இறங்கி வெற்றி வாகை சூடிய காளை. இந்தக் கிராமத்திற்கே செல்லப் பிள்ளையாக வளர்ந்தது மட்டுமன்றி, பல்வேறு போட்டிகளில் வென்று கிராமத்திற்கு பெயர் வாங்கித் தந்தது என்பதால் அப்பா காளையின் இறப்பு சோளங்குருணி, எனது சொந்த ஊரான கரிசல்குளம் கிராமங்களுக்கே பேரிழப்பாகும்" என்றார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்களும் காளைகள் வளர்ப்போரும் பெருந்திரளாக வந்திருந்து இறந்த காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்ல முடியாத காளையாக அப்பா காளை திகழ்ந்தது எனவும் அதன் இழப்பு தாங்க முடியாத பேரிழப்பாகும் என்று வீரர்கள் அனைவரும் தங்களது கருத்தை தெரிவித்தனர்.
இறந்த மனிதருக்கு செய்கின்ற இறுதி காரியத்தைப் போலவே பேனர் அடித்து, ஊரில் உள்ள அனைவருக்கும் இழவு சொல்லி கரகாட்டம், பறையாட்டம் எனத் தங்களின் செல்லக் காளைக்கு இறுதிச் சடங்கை சோளங்குருணி கிராம மக்கள் செய்துள்ளனர்.
இதையும் படிங்க : கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திய காளையின் மரண செய்தி!