தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது முதல்கட்ட தேர்தல் பரப்புரையை மதுரையில் நேற்று தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக மதுரை காமராசர் சாலையிலுள்ள தனியார் அரங்கத்தில் மகளிர், இளைஞர்கள், மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பேசிய அவர், "மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்ற எம்ஜிஆரின் கனவை மக்கள் நீதி மய்யம் நிறைவேற்றும். ஊழல் பேர்வழிகளை ஒழித்துகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஜனவரி மாதத்தில் ஜல்லிகட்டு, மே மாதத்தில் கயவர்களுடன் மல்லுக்கட்டு, ஆயத்தம் இல்லாமல் எந்தக் களத்திலும் இறங்க மாட்டேன். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யும் அரசை தான் நாம் அமைக்க வேண்டும். மக்கள் அரசியலை கையில் எடுக்க வேண்டும்.
எங்களின் ஒரே வாக்குறுதி நேர்மை, அடுத்த வேலை உணவுக்கு ஏங்குபவனிடம் ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் வாங்கதான் செய்வான். பேச வேண்டிய நேரம் முடிந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தனிமனிதனாய் ஊழலை ஒழிக்க முடியாது. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ஐஏஎஸ் அலுவலர்களை வைத்து மது விற்பனை செய்யப்படுகிறது.
மநீம ஆட்சியில் விவசாயிகள் அங்கீகரிக்கப்படுவர்கள், இலவசமாக குடிநீர் வழங்கப்படும். மாணவர்களை பொதி சுமக்கும் கழுதையாக மாற்றக் கூடாது. நீட் தேர்வை ரத்துசெய்யும் விவகாரத்தில் கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கைப்பேசி உதவியுடன் தேர்வெழுதிய 2 இளைஞர்கள் சிக்கினர்!