ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள சொடையூர் கிராம மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். சொடையூர் கண்மாய் தண்ணீரை வைத்து, இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் இருந்து சொடையூர் கண்மாய் தண்ணீர் வசதி பெறுகிறது.
தற்போது ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை ஜெயப்பிரகாஷ் என்பவர் மதுரையைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரது பெயரில் குவாரி உரிமம் பெற்று சொடையூர் கண்மாய் பகுதியில் கிராவல் மண் எடுத்து வருகிறார்.
இதனால் இப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மேலும் சொடையூர் கண்மாய் பாதிப்படைவதுடன், இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, குவாரி நடைபெறும் இடத்தை வழக்கறிஞர் ஆணையம் நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். குவாரி நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதமாக குவாரி உரிமம் வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குவாரி அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா?, சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை நடைபெறுகிறதா? என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 3 நாட்களுக்குள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சசிகலா வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு