இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மதுரை மாவட்டம் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிவப்பு மண்டலமாக மத்திய சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதால், புதிய அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி, விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள் தவிர எந்த ஒரு கடைகளும் திறப்பதற்கு மதுரை மாநகராட்சி பகுதியில் தற்பொழுது அனுமதி இல்லை.
வரும் நாட்களில் சூழ்நிலைக்கு ஏற்ப விதிமுறைகள் மதுரை மாநகராட்சி பகுதியில் படிப்படியாக தளர்த்தப்படும். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், வரும் 6ஆம் தேதி முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் அனைவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வாராமல் www.tnepass.tnega.org என்ற இணைய தள முகவரியில் மட்டும் விண்ணப்பித்து உரிய அனுமதி பெறவேண்டும்.
அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் மாவட்ட நிர்வாகம் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கதிர் அரிவாள் தயாரிப்பு தொழிலாளர்கள்