ராமநாதபுரத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனது கணவர் தங்கப்பாண்டி மீனவராக வேலை பார்த்து வந்தார். 2005இல் மீன் பிடிப்பதற்காக போகர், பொன்ராஜ், ஆரோக்கியம் ஆகியோருடன் அவர் சென்றார். மறுநாள் வீடு திரும்புவதாகக் கூறியிருந்த நிலையில், அவர் 12ஆம் தேதி வரை வீடு திரும்பவில்லை.
இதைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் அவர்களைத் தேடி படகுகளில் சென்றபோது எனது கணவரைத் தவிர மற்ற மூவரும் மீட்கப்பட்டனர். எனது கணவர் கடலில் விழுந்ததால் அவரை மீட்க இயலவில்லை எனவும் தெரிவித்தனர். ஆனால் எனது கணவரின் உடல் தற்போது வரை மீட்கப்படவில்லை.
எனது கணவரைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் அவர் இறந்ததாக வருவாய்த் துறை அலுவலர்கள் இறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். இதுதொடர்பாக இழப்பீடு கோரி அலுவலர்களை அணுகியபோது இறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்ய இயலும் என்று கூறுகின்றனர். ஆகவே, எனது கணவரின் இறப்புச் சான்றிதழை வழங்கவும், அதனடிப்படையில் எனக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு மீனவர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டாலும் பலர் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், கடந்த 13 ஆண்டுகளாகக் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'கரோனாவா? மீன்பிடிக்கப் போ!' - தமிழ்நாட்டு மீனவர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளும் அரேபியா!