திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியைச் சேர்ந்த நித்தியானந்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் " 2015ஆம் ஆண்டு திண்டுக்கல் PSNA கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பு (Electronics and communication) பொறியியல் பிரிவில் சேர்ந்தேன். 2019ஆம் ஆண்டு படிப்பை முடித்த நிலையில் 14 படங்களில் அரியர் இருந்தது.
தற்போது அரியர் தேர்வுகளை எழுத தமிழ்நாடு அரசு அனுமதித்திருந்த நிலையில், கடந்த மே 23ஆம் தேதி 14 பாடங்களுக்கும் சேர்த்து 2 ஆயிரத்து 100 ரூபாயை கட்டணமாக செலுத்தினேன். ஆனால், தேர்வெழுதும் மாணவர்களுக்கான மின்னஞ்சல் எனக்கு அனுப்பப்படவில்லை. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினை அணுகியும் எவ்விதமான நம்பத்தகுந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஆகவே, அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுடன் இணைத்து என்னையும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், "அரசு தேர்வுக்கட்டணம் செலுத்தினாலே, தேர்ச்சி என அறிவித்திருக்கும் நிலையில், மாணவர் கட்டணம் செலுத்தி, தேர்வெழுத அனுமதி கேட்கிறார். அவரை தேர்வெழுத அனுமதிப்பதில் என்ன சிரமம்?'' எனக் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு”- கனிமொழி குற்றச்சாட்டு