நெல்லையைச் சேர்ந்த முத்துகுமாரசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " நெல்லை ஏர்வாடி பொத்தையடியில் உள்ளது அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இந்த கோயிலுக்கு அப்போதைய மன்னர் தங்க, வைர நகைகள், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத சிலையை தானமாக வழங்கினார்.
நகைகள் ஒவ்வொரு சிவராத்திரியின்போதும் சாமிக்கு அணிவிக்கப்படும். ஆனால் அந்த நகைகளை அலுவலர்கள் அவர்களின் சொந்த தேவைக்காக பயன்படுத்துகிறார்கள்.
எனவே கோயிலுக்கு சொந்தமான தங்கம், வைர நகைகள் மற்றும் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத சிலையை மீட்டு, ஒவ்வொரு மகாசிவராத்தியின்போதும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திககேயன்," இது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய நெல்லை அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.