நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சட்ட விரோதமாக மாணவர் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உதித் சூர்யா சார்பில் தான் கைது செய்யப்படக்கூடாது எனக்கூறி, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முதலில் மாணவர் உதித் சூர்யாவை போலீசார் முன்னிலையில் சரணடைய அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை காவல் துறையினர் கைது செய்துவிட்டனர். இந்த நிலையில் மாணவர் உதித் சூர்யா தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவரை சரணடைய அறிவுறுத்தியிருந்த நிலையில், காவல் துறையினர் கைது செய்துள்ளதால் ஜாமீன் மனுவாக ஏற்க இயலாது என நீதிபதி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட உதித் சூர்யாவின் வழக்கறிஞர், அவரும், அவரது தந்தையும் சரணடைய வந்தபோது தான் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அப்போது நீதிபதி மாணவரின் வயது என்ன என்று கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் 20 என குறிப்பிட்டவுடன், இந்த குற்றத்திற்கு மாணவரின் தந்தைதான் காரணம் என தெரிவித்ததுடன், மாணவரின் வயதை கருத்தில் கொண்டு, அவரது முன் ஜாமீன் மனு, ஜாமீன் மனுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்து, விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க:
நீட் ஆள்மாறாட்ட வழக்கு; மாணவர் உதித் சூர்யா திருப்பதியில் கைது