மதுரையைச் சேர்ந்த முதல்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ”சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரைக் கிளைக்குட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள பட்டா நிலத்தில் சவுடு மணல் அள்ளுவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆற்றுப்படுகையில் எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்று கடந்த 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, உயர்மட்டக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, குழு தாக்கல் செய்த அறிக்கையில் படுகைகளில் மணல் அள்ளப்படுவதால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலும் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவில் பட்டா நிலம், ஆற்றுப் பகுதிகளில் குவாரி அமைத்து மணல், சவுடு மண் ஆகியவை அள்ளப்படுகின்றன என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக வட்ட மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், மணல் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை. எனவே, பட்டா நிலத்தில் உவரி மண் அள்ள தடைவிதித்தும் வல்லூர் குழு ஒன்றை அமைத்து, பட்டா நிலத்தில் சவுடு மண் அள்ளப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அரசுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வல்லூர் குழு அமைத்து பட்டா நிலங்களில் சவுடு மண் அள்ளப்படுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் - பிரமாணப் பத்திரம் தாக்கல்