மதுரை: திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகமது நாசர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் பயில்கின்றனர். 18 ஆசிரியர்கள், இரண்டு ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். 2019இல் பள்ளிக் கல்வித் துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 வகுப்புகளில் தமிழ் வழிப் பிரிவுக்கு இணையாக ஆங்கில வழிப்பிரிவு தொடங்க அனுமதி வழங்கியது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழிப்பிரிவு தொடங்கப்பட்டது.
ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும், அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததை ரத்துசெய்யவும், பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மூன்று பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் அனுமதி கோரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
அவரது உத்தரவை ரத்துசெய்து ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர் நியமனத்துக்கும், கூடுதலாக மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு, "ஒவ்வொரு பள்ளியையும் தனி அலகாகக் கருத வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் இருக்க வேண்டும்.
ஆசிரியர் நியமனம் தொடர்பாக மனு அளிக்கும்போது, அந்த மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை, உபரி ஆசிரியர் எண்ணிக்கையைச் சமன் செய்த பிறகே புதிய ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மனுதாரர் அனுப்பிய மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித் துறை அலுவலர்கள் பரிசீலிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நியாய விலைக் கடையில் கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள்!