மதுரை: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2018ஆம் ஆண்டு, கரூர் மாவட்டத்தைச் சார்ந்த செந்தில் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடம் 14 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா, ஷர்மிளா என இருவர் ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இந்த வழக்கில் மனுதாரர்கள் மற்றும் மேலும் ஒருவர் என 3 பேர் மீது, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 96,50,000 ரூபாய் பணத்தை அரசு வேலை வாங்கித் தருவதாக வசூல் செய்து ஏமாற்றி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கும் காலத்தை கருத்தில்கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் 3 லட்ச ரூபாய் பணத்தினை கரூர் கீழமை நீதிமன்றத்தில் வைப்பு நிதியாக செலுத்தவும், மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினந்தோறும் காலை கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: NEET UG 2023 Counselling: MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவக்கம்!