இதுதொடர்பாக திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், 196 பேரின் விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர் தேர்வாணையம் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்பின் மீண்டும் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கான தேர்விற்கு அறிவிப்பானை வெளியிட்டு, 2020 மே மாதம் தேர்வு நடைபெறும் என அறிவித்தது.
ஆனால் கடந்த தேர்வின் போது முறைகேடு செய்த 196 பேரின் மீது சட்ட ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து வெளிப்படையான அறிவிப்பு வெளியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கடந்த தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,TNPSC போல் வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகள் எழுத தடை விதிக வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், முறைகேட்டில் ஈடுபடாத தேர்வர்களுக்கு இந்த முறை தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவித்ததை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அரசு பணியாளர்கள் நியமனம் தொடர்பான நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்து உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளும்படி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை: தமிழ்நாடு தேர்வுத்துறை எச்சரிக்கை