மதுரை: விருதுநகரைச் சேர்ந்த ஜவகர், சிவசங்கர் உள்ளிட்ட 5 பேரை அரசுப் பணியிலிருந்து விடுவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்;
'தமிழ்நாடு அரசு மே 7ஆம் தேதி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 59ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அதில் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் ஏப்ரல் 30ஆம் தேதி அன்றே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், இந்தக் கல்வியாண்டு முடிவு பெறாததால், மே 31ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு இந்த வயது நீட்டிப்பு பொருந்தாது. கரோனா தொற்று பிப்ரவரி மாதம் முதல் இங்கு இருந்து வருகிறது.
இந்த இக்கட்டான காலத்தில் பணியாற்றிய அரசுப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தி வெளியிட்ட அரசாணை மே மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என உத்தரவிட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். என்னை போன்றவர்களின் பணியும் ஓராண்டுக்கு நீட்டிக்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், 'ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. மனுதாரர்கள் தற்போதுவரை பணியில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு
அரசாணை பொருந்தாது என்பது ஏற்கத்தக்கதல்ல" என வாதிட்டார்.
அதற்கு அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதிக்க கோரினார். இதையடுத்து நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது குறித்து அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன்3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.