மதுரை ஆதீன மட மேலாளர், ஆதீன மேலாளர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாரவர்மனால் மதுரை ஆதீன மடத்திற்கு பல ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் தற்போது பலர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஆதீன மடத்திற்கு எந்த வருவாயும் இல்லை.

எனவே, ஆக்கிரமிப்பு செய்தவர்களை வெளியேற்றி மடத்திற்குச் சொந்தமான நிலத்தை ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு அளித்தோம். சம்பந்தப்பட்ட நிலத்தை 15 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் யாரும் காலி செய்யவில்லை. அதே நேரம் அறநிலையத் துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நீதிமன்றம் தலையிட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி சம்பந்தப்பட்ட நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம். கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை தரப்பில் கூறுகையில், ஆதீன மடத்தினரின் மனுவில் சில விBரங்கள் இல்லை. எனவே, அவற்றை சரி செய்து தருமாறு திரும்ப அளித்துள்ளோம் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் தங்களது கோரிக்கை தொடர்பாக இரண்டு வாரத்தில் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை அறநிலையத் துறை இணை ஆணையர் இரண்டு மாதத்தில் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.