சென்னையைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் , திண்டுக்கல் மாவட்டத்தில் சவுடு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீர் நிலைகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.
திண்டுக்கல் மாவட்ட மண் குவாரிகளை ஆய்வு செய்ய ஆணையராகநியமிக்கப்பட்ட ஆணையர் வழக்குரைஞர் டி.லஜபதிராய், சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் அரசு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. இங்கு 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும்.
மனுதாரர் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக்கோரி அலுவலர்களிடம், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு இயந்திரம் துணைபோயுள்ளது.
சட்டவிரோத மணல் கொள்ளையர்கள் மீது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு துணைபோகும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
ஏற்கனவே ஒரு வழக்கில் மணல் கொள்ளைக்கு துணைபோகும் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் கடந்தாண்டு மே 28-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி எத்தனை அலுவலர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை.
இது தொடர்பான தகவல்களை அலுவலர்கள் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும்.
பழனி சித்தரேவு கிராமத்தில் உரிமம் பெறப்படாத இடத்தில் தனி நபர் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்த அனுமதித்த அலுவலர்கள் ரூ.75 லட்சம் வைப்புதொகை செலுத்தவேண்டும்.
மேலும் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது தொடர்பாக எத்தனை அலுவலர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் என்னென்ன பொறுப்புகளில் உள்ளனர்? என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.