மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தாமஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், புதுக்கோட்டை கொத்தமங்கலம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர், விதிகளை மீறி சட்ட விரோதமாக கழிவறை கட்டி வருகிறார். இந்த கழிவறைகள் கட்டும் இடமானது வருவாய்த்துறை பதிவேடுகளில் 13 ஹெக்டேர்ஸ் பரப்பளவில் புதுக்குளம் கன்மாய் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கழிவறைகள் கட்டப்படும் இடத்தின் வழியாகவே மழைக்காலங்களில் நீரானது புதுக்குளத்தை வந்து சேரும் என வருவாய்த்துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுக்குளம் நீர் நிலை புறம்போக்கு பகுதியில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேருந்துகள் நிறுத்தும் கொட்டகை இடமாக மாற்றப்பட்டதை எதிர்த்து அறந்தாங்கி முனிசிபல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தடை பெறப்பட்டது.
இந்த நிலையில் நீர் நிலை புறம்போக்கு பகுதியில் கழிவறை கட்டுவதை தடுக்க தடை விதிக்க வேண்டும். மேலும் கட்டுமானங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என மனு தக்கல் செய்திருந்தா்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்து எவ்வாறு கட்டடம் கட்ட அனுமதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதித்து மனு குறித்து மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை