தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் வரலாற்று சிறப்பு மிக்க நாகரிகங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
அதன் வெளிப்பாடாக தற்போது கீழடியில் ஏராளமான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல் ஆதிச்சநல்லூரில் கற்கால வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. சிவகளையில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக நாகரிகமான முறையில் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
எனவே இதுபோன்ற வரலாற்று சான்றுகள் தமிழர்களின் நாகரிகம் மற்றும் பண்பாடு திறனை வெளிக்கொண்டு வரும். எனவே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜவள்ளிபரம்பு, பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம் பரம்பு, வடக்கு வள்ளநாடு, அகரம், முரப்பநாடு, திருப்புளியங்குடி, ஸ்ரீவைகுண்டம், குறும்பூர் நல்லூர், கொற்கை, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் உள்ளிட்ட 32 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியிருந்தேன்.
தமிழ்நாட்டில் முக்கிய பகுதிகளில் விரிவான அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் தமிழ்நாட்டின் தொன்மையான வரலாறு நிரூபிக்கப்படும். எனவே, தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் ஆகிய இடங்களில் மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த பொதுநல மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய கலாசாரத்துறைச் செயலாளர் மற்றும் மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கீழடி களத்தில் புதிய வரலாறு படைக்கும் தொல்லியல் மாணவிகள்