சிவகங்கை இளையான்குடியைச் சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"1995ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, ஊராட்சி மன்ற பதவிகள் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒதுக்கீடு சுழற்சி அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்.
தாயமங்கலம் ஊராட்சி இளையான்குடி பஞ்சாயத்தின் கீழ் வரும். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடந்த மே 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தாயமங்கலம் ஊராட்சியின் 16ஆவது வார்டு ஆதி திராவிட பெண் பிரிவினருக்கும், 1ஆவது வார்டு ஆதி திராவிட பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி தாயமங்கலம் ஊராட்சியில் உள்ள 1ஆவது மற்றும் 16ஆவது வார்டுகள், இந்த தேர்தலின் போது சுழற்சி முறையில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறையின் முதன்மைச் செயலருக்கு மனு அளித்த போது, அவ்விரு வார்டுகளும் ஏற்கனவே ஆதி திராவிட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுப்பிரிவினர் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்த இயலாத நிலை உள்ளது. இது போல பல இடங்களிலும் சுழற்சி முறையில் ஒதுக்கீடு நடைபெறவில்லை என தெரியவருகிறது.
ஆகவே, உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக மே 20இல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறையின் முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, சுழற்சி முறை ஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றி புதிய அரசாணையை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவுகளில் தலையிடக்கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ஏழு வருடங்களாக கைவிட்ட பிள்ளைகளை தேடி அலையும் தம்பதி!