மதுரை ஆதி தமிழர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள அருந்ததியினர் காலனி உள்ளது. அங்கு 275 வீடுகள் உள்ளன. அதில் 90 வீடுகள் மட்டுமே கான்கிரீட் வீடுகள். மற்ற வீடுகள் அனைத்தும் தகரக் கொட்டகைகள். 70 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி வாழ்ந்து வருகின்றனர். இங்கு குடியிருக்கும் அனைவரும் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 23.02.2009ஆம் ஆண்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பட்டா வழங்க , நில உரிமம் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி சார்பில் நில உரிமம் மாற்றம் செய்து கொடுத்த பிறகு, குடிசை மாற்று வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டு அருந்ததியினர் மக்களுக்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 28 சென்ட் இடத்திற்கான உரிய தொகையினை, குடிசை மாற்று வாரியம் செலுத்தி விட்டது. இதன் பின்னரும் மாநகராட்சி நிர்வாகம், அந்த இடத்திற்கு நில உரிமம் மாற்றம் செய்து தரவில்லை.
எனவே, சுப்பிரமணியபுரத்தில் உள்ள அருந்ததியினர் காலனியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை, தாமதிக்காமல் உரிமம் மாற்றம் செய்து தர வேண்டும். அதைத் தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் அந்த இடத்தில் அடுக்குமாடி வீடு கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சிவஞானம் , தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து குடிசை மாற்று வாரிய தலைமை நிர்வாக பொறியாளர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் முதல் வாரம் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: