திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த நவ்ரோஸ் கே.மோடி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கொடைக்கானில் தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டடம் உள்ளது. நான் இந்த கட்டத்தை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறேன். அந்த கட்டடத்தின் உரிமையாளர் அந்த இடத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தார். அதன் பிறகு புதிய உரிமையாளரிடம் வாடகை செலுத்தி வந்தேன்.
பின்னர் புதிய உரிமையாளருக்கும், எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கொடைக்கானல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், உரிய உத்தரவின்றி இரண்டு வழக்கறிஞர்கள் உதவியுடன் எனது வீட்டின் ஒரு பகுதியை புதிய உரிமையாளர் இடித்தார்.
இது குறித்து நான் கொடைக்கானல் காவல் நிலையத்தில், பல முறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது பழமையான கட்டடத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி பழமையான கட்டடத்தை இடித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், மனுதாரர் புகார் குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.