மதுரை: முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் யூ-ட்யூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை இட்டிருந்தார். பின்னர் அதை அவர் நீக்கியும் விட்டார். இருப்பினும் அவரது பதிவு ஸ்கிரீன்சாட் எடுக்கப்பட்டதோடு புகாரும் அளிக்கப்பட்டது.
மாரிதாஸ் நீக்கிய அந்தப் பதிவு தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது...
- 124A
- 153-A
- 504
- 505 (1) & (2)
- 505 (2)
ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது எனவும், வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அடிப்படை ஆதாரமற்றவை
அப்போது அரசுத் தரப்பில், "முப்படைகளின் தலைமைத் தளபதி மரணத்தின் அடிப்படையில் தேவையற்ற கருத்தை மாரிதாஸ் முன்வைத்துள்ளார். மாநில அரசுக்கு எதிராகவும், அதன் நேர்மையையே கேள்விக்குள்ளாகும் வகையிலும் பதிவுசெய்துள்ளார்.
இளம் உள்ளங்களில் வன்முறையைத் தூண்டும்விதமாக அவரது பதிவு உள்ளது. இது தொடர்பாக தேவையற்ற கருத்தைப் பதிவுசெய்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "சீமான், மாரிதாஸுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்" எனக் கருத்து தெரிவித்தார். மனுதாரர் தரப்பில், மாரிதாஸ் அரசை விமர்சிப்பவர். அவரை அமைதியாக்குவதற்கே கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது பதியப்பட்ட பிரிவுகள் அடிப்படை ஆதாரமற்றவை என வாதிடப்பட்டுள்ளது.
வழக்கு ரத்து
மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாரிதாஸ் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தது செல்லாது எனக்கூறி, அவர் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாரிதாஸ் போல சு. சுவாமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? - நீதிபதியின் அடுக்கடுக்கான கேள்வி