தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரிபிரியா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மதுக்கடைகள் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் தமிழ்நாடு அரசிற்கு வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாடு அரசின் முதுகெலும்பாக மதுபானக்கடை வருமானம் உள்ளது. அதில், விற்பனையாகும் மதுபானத்திற்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. மதுபானக் கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு மதுபானக் கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை. எனவே, 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மதுபானக் கடைகள் மூலம் பெற்ற வருமானம் பற்றிய விவரம், மது அருந்துபவர்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒவ்வொரு மதுபானக் கடையிலும் மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்கவும், கணினி மயமாக்கப்பட்ட ரசீது வழங்கப்படவும், போலி மதுபான விற்பனையை தடுக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை செய்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் மது விற்பனையே கொள்ளையடிப்பது போன்றதாகும். மது வாங்க வரும் பெரும்பாலானவர்களும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருகிறார்கள். இந்நிலையில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பது, அவர்களிடமே கொள்ளையடிப்பது போல உள்ளது எனக் கருத்து தெரிவித்தனர்.
மேலும்,
- தமிழ்நாட்டில் மதுபானத்திற்கு விலை நிர்ணயம் எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது?
- மதுவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
- எத்தனை கம்பெனிகளிடமிருந்து தமிழ்நாடு அரசு மதுவை வாங்குகிறது?
- அந்த கம்பெனிகளின் விவரங்கள் என்ன?
- கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மது விற்பனை, லாபம், செலவீனம் உள்ளிட்ட விவரங்கள் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க...மருத்துவப் படிப்பு: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு!