மதுரை: மனித உரிமை மீறலில் (Human Rights Violation) ஈடுபட்டதாக காவல் ஆய்வாளர்கள் இளங்கோவன், பெத்துராஜ், சர்மிளா, உதவி ஆய்வாளர் முனீஸ்வரன் ஆகியோருக்கு எதிரான வழக்கில், மதுரை மாவட்ட விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாநகரைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் நாகா ஏஜென்சிஸ், ஸ்ரீநாகா டிரேடிங் கம்பெனி உள்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தேன்.
கடந்த 2010ஆம் ஆண்டில் எனது நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் கணேஷ்குமார் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். திடீரென அவர் நிறுவன ஆவணங்கள், காசோலைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார். எனக்கு தெரியாமல், பல ஆவணங்கள் மாற்றி முறைகேடு செய்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதற்கு மாறாக, மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த இளங்கோவன் (தற்போது கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார்), தற்போது கீரைத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பெத்துராஜ், சிறப்பு புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் (ஓய்வு பெற்றுவிட்டார்) ஆகிய 4 போலீஸ் அதிகாரிகளும் எங்கள் நிறுவனத்தில் மோசடி செய்தவர்களுடன் கூட்டு சேர்ந்து என்னையும், என் மனைவியையும் காவல்நிலையத்தில் சட்ட விரோதமாக இரவு நேரத்தில் வைத்து மிரட்டி, தாக்கி சித்திரவதை செய்தனர்.
பின்னர், எங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தையும், வெற்று காசோலைகளையும் பறித்துக் கொண்டனர். என் தாயாரின் வங்கிக்கணக்கில் இருந்த பல லட்சங்களையும் மோசடி செய்தனர். இது சம்பந்தமாக, மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்.
பல ஆண்டுகளுக்கு பின்பு 2021ஆம் ஆண்டில்தான் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். 13 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட எனக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல் வழக்கை விரைவாக விசாரித்து, போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என அம்மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்னிலையில் இன்று (அக்.5) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “காவல் ஆய்வாளர்கள் இளங்கோவன், பெத்துராஜ், சர்மிளா, உதவி ஆய்வாளர் முனீஸ்வரன் ஆகியோர் மனு தாரர் மற்றும் அவரது மனைவியை இரவு நேரத்தில் சட்ட விரோதமாக காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஆய்வாளர்கள் பெத்துராஜ், சர்மிளா மற்றும் உதவி ஆய்வாளர் முனீஸ்வரன் ஆகியோர் சட்ட விரோதமாக மனுதாரரை, சட்ட விரோத காவலில் வைத்துள்ளதாக துறை ரீதியான அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்” என வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் வழக்கு குறித்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டபோது, அவரது வழக்கில் எதிர் தரப்பினர் சார்பில் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்து இருப்பதால் பிரதான வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது. எனவே, இடைக்கால மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தொடர்ந்த மனித உரிமை மீறல் வழக்கை 8 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: "எங்க தலைவருக்கும் மரியாதை கொடுங்க" - அண்ணாமலைக்காக வரிந்து கட்டிய பொன்.ராதாகிருஷ்ணன்