திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள உச்சப்பட்டியைச் சேர்ந்த விமலா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் மணிகண்டன், கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் ஒருவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
என் கணவரின் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. என் கணவரின் உடலைக் கைப்பற்றிய விருவீடு காவல் துறையினர், என்னிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் விதிகளைப் பின்பற்றாமல் உடற்கூறு ஆய்வுசெய்தனர்.
எனது கணவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது இறப்பில் மர்மம் உள்ளது. எனவே, 2 மூத்த தடயவியல் பேராசிரியர்களைக் கொண்டு என் கணவரின் உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்.
உடற்கூறு ஆய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பொங்கியப்பன், மதுரை அரசு மருத்துவமனை தடயவியல் துறை பேராசிரியர் செல்வராஜ் மூலம் மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அதனை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும், மனுதாரர் தரப்பில் இறந்தவரின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.