மதுரை: மதுரை பாண்டியன் ஓட்டல் அருகே உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "மதுரை சாத்தமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சமூக ஊடகங்களில் ஒரு வைரல் வீடியோ பரவி வந்தது. கல்லூரி மாணவர்கள் 3 பேர் பொறுப்பற்ற வகையில் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்கின்றனர்.
பைக்கில் வேகமாக சென்றபடியே, கையில் வைத்திருந்த மதுபாட்டில்களை குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை அண்ணா நகர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், பின் விளைவுகளை யோசிக்காமல் செய்துவிட்டோம். எனவே, எங்களுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என மனுவில் மாணவர்கள் கூறி உள்ளனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நேற்று (மார்ச்.4) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், கல்லூரி மாணவர்கள் விளைவுகளைப் புரிந்துகொள்ளாமல், பின் விளைவுகளை அறியாமல் சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில் குடித்துகொண்டே பைக்கில் வேகமாக சென்றபோது வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றும் செய்து உள்ளனர்.
மனுதாரர்கள், தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர். இனி மேல் இது போன்று நடக்காது. இந்த வழக்கில், மனுதாரர்களான கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டால் தொழில், எதிர்காலம் பாழாகிவிடும். எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் இந்த நீதிமன்றத்தால் விதிக்கப்படும் எந்தவொரு கடுமையான நிபந்தனைக்கும் கட்டுப்படவும் தயாராக உள்ளனர். இதனால், மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில், மனுதாரர்கள் வாகனம் ஓட்டும் போது மதுபாட்டில்களை பிடித்துக் கொண்டும், மது அருந்திக் கொண்டும் மோட்டார் சைக்கிள்களை அலட்சியமாக வேகமாக ஓட்டிச் சென்றனர். அந்த, காட்சியை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து உள்ளனர். இது பொறுப்பற்ற செயல். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக மாறியது. இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக உள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மது அருந்திக் கொண்டே, சினிமா பாடலுடன் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்று உள்ளனர். இது பொதுமக்களுக்கு எரிச்சலூட்டி, இடையூறு விளைவிக்கும் செயல். கல்லூரி மாணவர்கள் குற்றப் பின்னணி இல்லாத இளைஞர்கள். அதே நேரத்தில், பின்விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில், விதிகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து உள்ளனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த செயலையும் செய்ய மாட்டோம் என்றும், நல்ல நடத்தை மூலம் தங்களை தகுதியான குடிமக்களாக நிரூபிப்போம் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். எனவே, கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கும் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.
கல்லூரி மாணவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள விபத்து சிகிச்சை பிரிவு வார்டில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணி முதல், மதியம் 12.00 மணி வரை தங்கியிருந்து, நோயாளிகளை கவனித்துக் கொள்ள வேண்டும். விபத்து சிகிச்சை பிரிவு வார்டில் 4 வாரம் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: Exclusive: வடமாநில தொழிலாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த டிஜிபி சைலேந்திரபாபு