மதுரை: ஹெச். ராஜா நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை திருமயத்தில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைப்பது தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது.
அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில் என் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமர்சனம் செய்ததற்காக உயர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
'என் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி'
இந்நிலையில் திருமயம் காவல் துறையினர் திருமயம் நீதித் துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளனர். அந்தக் குற்றப் பத்திரிகையில் நான் தலைமறைவாக இருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
![ஹெச் ராஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12459151_thumd.jpg)
என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜுலை 27இல் முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காவல் துறையினர் என்னைக் கைதுசெய்யாமல் இருக்க முன்பிணை வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இருதரப்பு வாதம்
இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஹெச். ராஜா தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், "வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிட்டது. எனவே இந்த வழக்கில் முன்பிணை தர வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.
![உயர்நீதிமன்ற மதுரைக் கிளை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12459151_thum.jpg)
அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், "இந்த வழக்கில் முன்பிணை கொடுக்க எங்களது தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். இதற்கான எதிர்மனு தாக்கல்செய்ய வேண்டும். எனவே எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கில் எதிர்மனுதாரர் இடையீட்டு மனு தாக்கல்செய்ய அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அமித்ஷா பெரிய சங்கி; அண்ணாமலை சின்ன சங்கி!