மதுரை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், சுடலைமணி, உச்சி மாகாளி ஆகியோர் கல்லூரி மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு சிகரெட், வெளிநாட்டு மதுபானங்கள், தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், 3 பேரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
18 வயது பூர்த்தியாகாத சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததால், போதைப் பொருள் குற்றவாளிகள் என கருதி தமிழ்நாடு அரசின் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின்படி குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, கைதான 3 பேரின் மனைவிகளும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கைது செய்யப்பட்ட 3 பேரும் போதைப் பொருள் குற்றவாளிகள் என கருதி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு“ என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “கைது செய்யப்பட்ட மூவரும் சிறுவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தடை விதிக்கப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டத்தின்படி, 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைத்தது சரி தான் “என வாதாடினார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், “கைது செய்யப்பட்ட மூவரும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்துள்ளனர். எனவே இவர்களை போதைப்பொருள் குற்றவாளிகள் என தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டத்தின்படி குண்டர் சட்டத்தில் அடைத்ததில் தவறேதும் இல்லை.
அதே நேரம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு காவல்துறை முறையான எழுத்துப்பூர்வமான தகவலை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். ஆனால் அப்படி வழங்கப்படாததால், 3 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. மூவரும் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்“ என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் வணிக உரிமையை புதுப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்!