மதுரை: மதுரை மாநகர் பங்கஜம்ஜகாலனியைச் சேர்ந்தவர்கள் குணாளன், கதிரவன் மற்றும் அருண் சக்கரவர்த்தி. இவர்கள் 3 பேரும் மதுரை கீழமாசி வீதி பகுதியில் ஸ்டேஷனரி மற்றும் சோப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய 4 கடைகளை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக குணாளன் மற்றும் அவரது உறவினர்களான கதிரவன் மற்றும் அருண் சக்கரவர்த்தி ஆகிய 2 பேரும் ஜிஎஸ்டி வரியை முறையாக செலுத்தவில்லை என மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், கடந்த 15 நாட்களுக்கு மேலாக சம்பந்தபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில், 3 பேரும் தனது வர்த்தகத்தின் மூலமாக பல கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி, நேற்று (ஜூன் 7) காலை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கடந்த 5 ஆண்டுகளாக வருவாயை மறைத்து பல கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஐஐடி மெட்ராசில் புதிதாக 'எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்' பாடத்திட்டம்; விண்ணப்பிக்க ஜூன் வரை அவகாசம்
பின்னர், மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவு பிரிவினர், அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த 3 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவர்களது நிறுவனங்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக அலுவலகத்தின் முன் குவிந்ததால் காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னதாக, நேற்று காலை வர்த்தகர்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் அடைத்து வைத்திருப்பதாகக் கூறி வர்த்தகர்கள் சங்கத்தினர் மற்றும் 3 வர்த்தகர்களின் குடும்பத்தினரும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்.. பால் திருட்டு முயற்சியா? - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்