மதுரை: தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கல்யாணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு, "தென்காசி மாவட்டம் இலஞ்சியில் ராமசாமிபிள்ளை உயர்நிலைப்பள்ளியில் 1994ஆம் ஆண்டில் ஆசிரியையாக சேர்ந்து பணியாற்றுகிறேன். என்னை நிரந்தர ஆசிரியை பணியிடத்தில் நியமிக்காமல், வேறொருவரை நியமித்துள்ளனர். அதை ரத்து செய்து என்னை நிரந்தர ஆசிரியையாக பணியமர்த்த உத்தரவிட வேண்டும்" என கடந்த 2018ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, "இந்தியாவின் மாணவர்களின் தரத்தையும் கல்வியையும் மேம்படுத்தும் நோக்கில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள ஆசிரியர்களின் அறிவு மற்றும் தரத்தை மேம்படுத்த 'ஆசிரிய மேம்பாட்டுத் திட்டம்' என்ற திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. மேலும், அதிக கல்வித்தகுதி பெறும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஆனால் மனுதாரருக்கு உரிய கல்வித்தகுதி இல்லை என்று கூறி, ஊக்கத்தொகையையும், பதவி உயர்வையும் வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. தகுதித்தேர்வில் மனுதாரர் 66.6 மதிப்பெண் பெற்றபோதும், அவருக்கு பதவி உயர்வு பணி நியமன குழுவும் நிராகரித்துள்ளது. தொடர்ந்து மனுதாரரை புறக்கணிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர். ஆனால் மனுதாரர் தனது உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடியுள்ளார்.
ஒரு பள்ளியில் இருக்கும் ஆசிரியர் அதே பள்ளியில் பதவி உயர்வு பெற தகுதியுள்ளது என விதிமுறைகள் கூறுகின்றன. அந்த வகையில் மனுதாரர் பதவி உயர்வு பெற தகுதியானவர். ஆனால் பள்ளி நிர்வாகம் பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனவே வேறு ஒருவரை முதுநிலை உதவி ஆசிரியையாக நியமித்தது உள்ளது ரத்து செய்யப்படுகிறது. அந்த பணியிடத்தில் மனுதாரரை நியமிக்க வேண்டும்.
இந்த பள்ளி, மானியம் பெறும் பள்ளி என அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூகநலனுக்காக மட்டும்தான். பள்ளி நிர்வாகம் தனி நிர்வாகத்தில் ஈடுபட்டு, அரசுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடாது.
இவர்களின் பாரபட்சமான அணுகுமுறையால் இதுபோன்ற வழக்குகள் அரசின் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் பாதிக்கிறது. கல்வி நிறுவனத்தை முறையாக நடத்த நிர்வாகம் முன்வரவில்லை என்றால், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து, அந்த கல்வி நிறுவனத்துக்கு வழங்கப்படும் மானியத்தை திரும்பப் பெற வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தொடரும் இதுபோன்ற வழக்குகளால் அரசு பாதிக்கப்பட வேண்டியதில்லை. அவர்கள் அற்பமான வழக்குகள் தொடர்ந்து, முறையாக செயல்படவில்லை என்றால் அவர்களை தேவையில்லாமல் அரசாங்கம் சுமக்க வேண்டாம்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'கூழாங்கல்' படம் விருது வாங்குவது உறுதி: விக்னேஷ் சிவன் பெருமிதம்