மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பங்கேற்றார். மேலும், இணைவேந்தரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி இந்த விழாவை புறக்கணித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக டாக்டர் மு.வ.அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். மும்பையிலுள்ள ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் (HBNI) துணைவேந்தரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான முனைவர். யு. காமாட்சி முதலி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
இந்த 55-ஆவது பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 570 மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் பெற்றனர். அவர்களில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 144 மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பருவத் தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்கள்.
இதேபோல், பருவத்தேர்வு முறையில் 22 ஆயிரத்து 782 மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள். 640 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டங்களும், இருவருக்கு அறிவியலுக்கான முதுமுனைவர் பட்டமும், ஒருவருக்கு இலக்கியத்திற்கான முதுமுனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. மொத்தமாக 62 ஆயிரத்து 598 மாணவர்களுக்கும், 71 ஆயிரத்து 328 மாணவிகளுக்கும் பல்வேறு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இது தவிர, 144 மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த விளங்கியமைக்காக நினைவுப் பரிசுகள் மற்றும் பதக்கங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்வில் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜா.குமார், பதிவாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.