மதுரையில் கரோனா பரிசோதனை ஒப்பீட்டளவில் பிற மாவட்டங்களை விட மிகமிகக் குறைவாக இருப்பதாகவும், இந்தப் பரிசோதனையை அதிகரிக்கவேண்டும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ’தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளது. கடந்த ஜூன் ஏழாம் தேதி வரை மதுரையில் 14 ஆயிரம் எண்ணிக்கையில்தான் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இது தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை விட மிக மிக் குறைவான எண்ணிக்கையாகும். ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், மாநில அளவில் சுமார் 6,500 ஆக உள்ளது. ஆனால் மதுரையில் இந்த சராசரி சரிபாதிக்கும் கீழே உள்ளது. அரசு வெளியிட்டுள்ள மொத்தப் பட்டியலில் மதுரை 30ஆவது இடத்தில் உள்ளது. தென் மாவட்டங்களில் மதுரைதான் கரோனா பரிசோதனையில் மிக மோசமான சராசரியை கொண்டுள்ளது.
ஆனால், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போதுமான பரிசோதனைகள் மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியதை நம்பிக் கொண்டிருந்தோம். தற்போது அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
மதுரையில் கடந்த 10 நாள்களில் சராசரியாக 250 பரிசோதனைகள்தான் நாளொன்றுக்கு நடைபெற்றுவந்துள்ளன. அதே சமயத்தில் குறிப்பிட்ட நாள்களில் சென்னையிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் மதுரை வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றிலிருந்து போர்க்கால அடிப்படையில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்றாயிரம் பேருக்கேனும் மதுரையில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றார்.