மதுரை: தென்காசி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிச்சந்திரன் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தென்காசியைச் சேர்ந்த பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் தனிநபர்கள் சிலர் வணிக ரீதியிலான கட்டடத்தை கட்டுகின்றனர். புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து இருதரப்பினரின் கருத்துகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும், நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், கடந்த விசாரணையின்போது உயர் நீதிமன்றக்கிளை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து இருந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் S.S.சுந்தர் மற்றும் பரதச் சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் ஒரு தரப்பினர் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிபதிகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு என்பதை பொது மக்களின் பயன்பாட்டிற்கான சொந்தமான இடமாக கருத வேண்டும் என்றும், எனவே, ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது எனவும், உரிய கால அவகாசம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை இரண்டு வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: Prison Bazaar: சிறைக் கைதிகளின் உற்பத்தி பொருள் அங்காடி - மதுரையில் பயோ-மெட்ரிக் வசதியுடன் தொடக்கம்!