மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறை, டயாலிசிஸ் முறை என இரண்டு முறைகள் உள்ளன. அதில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அதிக செலவுடையதாக இருப்பதால், ஏழை நோயாளிகள் பெரும்பாலும் டயாலிசிஸ் முறையையே பின்பற்றுகின்றனர்.
இதற்கிடையே தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழியங்கும் மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் நுட்பனர்கள் இருவரும், டயாலிசிஸ் தொழில்நுட்பப் படிப்பில் பட்டயப் படிப்பு பயின்றவர்கள் ஐந்து பேரும் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்து பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்ததன்படி, இரண்டு மூன்று டயாலிசிஸ் கருவிகளுக்கு நன்கு பயிற்சிபெற்ற நுட்பனர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடைமுறையில் இல்லை என்பதால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் செவிலியரும், டயாலிசிஸ் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களே டயாலிசிஸ் இயந்திரங்களை கையாளுகின்றனர்.
அதனால் ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முறையற்ற டயாலிசிஸ் சிகிச்சையினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளது. அதனால் அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில்நுட்பநர்களை நியமிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகளை வைக்கவும், போதுமான அளவு டயாலிசிஸ் தொழில்நுட்பனர் பணியிடத்தை உருவாக்கி அவற்றை நிரப்பவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் சகோதரர் மீதான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு