மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனா நகரைச் சேர்ந்தவர் ஐரின் ஹேனா ரோசலின் (51). இவரது கணவர் எட்வின் இறந்துவிட்டார்.
ஆசிரியை ரோசலின் பசுமலை தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவரது மகன் கல்லூரியில் படித்துவருகிறார்.
ஆசிரியர் நேற்று காலை பள்ளிக்குச் சென்றுவிட்டு, மாலை 4 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருப்பதைக் கண்ட ஆசிரியர் அதிர்ந்துபோயுள்ளார். வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது அனைத்து கதவுகளும் கடப்பாறைகளால் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர், பீரோவின் கதவை உடைத்து 65 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ஏழாயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, ஆசிரியர் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குவந்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
திருமங்கலம் நகர் பகுதியில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30ஆயிரம் கொள்ளை - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை