மதுரை: அதிமுக கட்சி சார்பாக அதன் பொருளாளர் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: “பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் உருவ சிலைக்கு தங்க கவசத்தை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
வருடம் வருடம் குருபூஜையொட்டி 3 நாட்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள Bank of India வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அதிமுக மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக-வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது அவர் அதிமுக-வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது.
எனவே வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அதிமுக பொருளாளர் சீனிவாசன் வசம் வங்கி நிர்வாகம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று (அக்.10) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுக விதிகளை மீறி பொதுக்குழு கூட்டப்பட்டு ஓ.பி.எஸ் நீக்கப்பட்டார். தற்போது வரை ஒரு சில ஆவணங்களில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் தான் உள்ளது.
இக்கட்டான நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்ததால் அவர் பொறுப்பில் தங்ககவசத்தை எடுக்க உத்தரவிட்டார். ஜெயலலிதா இருக்கும் போது நம்பிக்கைகுரியவராக பன்னீர்செல்வம் இருந்தார். பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்ததால் அவருக்கு அப்பொறுப்பை கொடுத்தார்.
ஜெயலலிதா நினைத்திருந்தால் வேறு பொறுப்புகளில் இருப்பவரை நியமித்து இருக்கலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஓ.பி.எஸ். தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேவர் கவசத்தை வேறு யாரிடமும் வழங்க கூடாது” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்போது அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளனர். வங்கியில் இருக்கும் கவசத்தை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலயம் நிர்வாகிகள் இணைத்து தான் எடுக்க முடியும்.
திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக பொருளாளர் என அதிமுக கட்சி சம்பத்தப்பட்ட வங்கி கணக்குகளில் மாற்றப்பட்டுள்ளது” என வாதிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றிருக்கலாம்.
மேலும் அதிமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நியமித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வங்கியில் உள்ள தங்க கவசத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் இருந்து எடுக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை புறநகர் பகுதிகளில் 324 சாலைகள் மிகவும் மோசம்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!