மதுரை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். விசாரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்டம் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (மார்ச் 5) வழங்கப்பட்டது.
அப்போது யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், உள்பட 10 பேர் குற்றவாளியாகவும், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரம் வரும் மார்ச 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது வழக்கில் தொடர்புடைய ஜோதிமணி உயிரிழந்த நிலையில், தலைமறைவாக இருந்த அமுதரசு என்பவர் மீதான வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசு வழக்கறிஞர் ப.மோகன் கூறுகையில், "இந்த வழக்கில் அரசு தரப்பில் 106 சாட்சியம் மற்றும் நீதிமன்ற தரப்பில் இரு சாட்சியங்கள் என 108 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்த நிலையில், அதில் சிசிடிவி உள்பட 100க்கும் மேற்பட்ட ஆவணப் பொருட்கள் சமர்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிறழ்சாட்சியம் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டு 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
10 பேரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்புக்காக தான் உயிரோடு காத்திருந்தேன், 10 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா கூறினார்.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை...