தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு நான்காவது முறையாக ஒடிசாவிலிருந்து இரண்டு டேங்கர் லாரிகளில் 31.02 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று (மே 29) மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதற்காக டேங்கர் லாரிகள் ரயில்வே பிளாட்பாரத்திலிருந்து இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக கூடல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு வந்த 29ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்.
இதுவரை தமிழ்நாட்டிற்கு ரயில் மூலம் 1734.01 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை வரும் இந்த ஆக்சிஜன் டேங்கர்கள் மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைக்கும் இந்த ஆக்சிஜன் விநியோகிக்கப்படுகிறது. தென் தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜன் கொண்டுவரும் பணியில் இந்திய ரயில்வே நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்திய அளவில் இதுவரை 300 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய ரயில்வே, 20 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை, கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.